Thursday, August 9, 2012

இன்றைய குழந்தைகள் - இயந்திரங்களா அல்லது மனிதர்களா?

 பாய்ந்தோடிவரும் ஆறு, பொங்கிவரும் வாய்க்கால், நிறைந்திருக்கும் கிணறு. அங்கே, கூட்டம் கூட்டமாக குதித்து விளையாடி மகிழும் சிறுவர்கள். 20 - 25 வருடத்திற்கு முன்னால் கிராமங்களில் இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் வார விடுமுறை நாட்களிலும், பரீட்சை விடுமுறைகளிலும் நிச்சயம் இருக்கும்.

விடுமுறைக்கு அம்மா வகை தாத்தா, பாட்டி, மாமா வீடுகளுக்கு சென்று அங்கே உள்ள நண்பர்களுடன் கின்று, வாய்க்காலில் குதித்து விளையாடுவது ஆனந்தமான விஷயம். அதிலும், 10 முதல் 15 பேர்வரை ஒரு குழுவாக சேர்ந்து தொட்டு விளையாட்டு போன்ற சாகசம் மிக்க விளையாட்டுகளும், பாய்ச்சல், குட்டி கரணம் போன்ற பல ஒலிம்பிக் சாகசங்களும் செய்வது பார்க்கவும், விளையாடவும் அருமையாக இருக்கும்.



அத்தகைய ஒரு இனிமையான சூழல் எனது குழந்தைபருவத்திலே, எனக்கு கிடைத்ததற்கு, எனது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், ஆண்டவனுக்கும் நன்றி.

இத்தகைய கொண்டாட்டங்கள் இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல, இனி எந்த தலைமுறைக்கும் வாய்க்க வாய்ப்பு இருக்காது. காரணம், நாம் வளர்ப்பு மற்றும் வாழ்க்கை முறை.

என்ன நடக்கிறது இன்று?



குழந்தை 3 வயது ஆனவுடன், பல கிலோ பையை முதுகில் மூட்டையாக கட்டி பள்ளிக்கு அனுப்பி விடுகிறோம். சிலர் நல்ல பள்ளியில் குழந்தையை சேர்க்க வேண்டும் என்பதற்காக, பல மைல் தொலைவில் உள்ள பள்ளிக்கு குழந்தையை பள்ளி வாகனத்தில் அனுப்புவார்கள். 9 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு, ஏழரை மணிக்கே குழந்தையை தயார் செய்து அனுப்ப வேண்டும். அரக்க பறக்க எழுப்பி, தண்ணீரை ஊற்றி விட்டு, அவசர கோலத்தில் வாயில் சோத்தை திணித்துவிட்டு பெற்றோர் படும் பாடு இருக்கிறதே, அதை சொல்லி மாளாது.

இது, பெரு நகரத்தில் மட்டுமல்ல, நிறைய சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் இப்போது நடக்க ஆரம்பித்து விட்டது. சிறு நகரங்களில் இருப்பவர்கள் அங்கே இருக்கும் பள்ளி சரி இல்லை என்று 20 மைல் தள்ளி இருக்கும் ஊருக்கு வாகனத்தில் குழந்தைகளை அனுப்புகிறார்கள். கிராமத்தில் இருப்பவர்கள் பக்கத்து நகருக்கு மேட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்.

அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் வெகு சிலர். அவர்களும் மிக்க ஏழையாக இருப்பார்கள் அல்லது அடுத்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாதவர்களாக இருப்பார்கள்.

கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக இருந்தால், மாலை பள்ளி முடிந்து வந்ததும், டியூஷன் செல்ல வேண்டும். வகுப்பில் நடத்தியதையே இன்னொரு முறை நடத்தி கொல்வார்கள்.

முன்பு போல குழந்தைகள் கூடி தெருவிலும், திடலிலும் விளையாடும் விளையாட்டுக்கள் இப்போது இல்லை. அது இன்னும் இருப்பது, பாரதியார் பாடலில் மட்டும்தான்.

அதே போல, மாலை பள்ளி முடிந்து வந்ததும் தொலைக்காட்சி முன் கார்டூன் அல்லது கணிப்பொறி விளையாட்டு என்று அமர்ந்து விடுவார்கள். அவர்கள் முடித்ததும், அம்மாக்களின் மெகா சீரியல்கள் ஆரம்பமாகும். அதையும் இந்த குழந்தைகள் 10 மணிவரை கண்கொட்டாமல் பார்க்கும். நமது மெகா சீரியல்களில் ஹீரோவை விட, வில்லன் வில்லிக்குதன் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த வில்லத்தனங்களை பார்த்து பார்த்துதான் குழந்தை வளரும்.

அடுத்தது, அவர்கள் கேட்கும் மற்றும் நாம் வாங்கி கொடுக்கும் விளையாட்டு பொருட்கள் பல. அதில், முதல் இடம் பொம்மை துப்பாக்கி தான். இப்படி, எல்லா வகையில் வன்முறை நிறைந்த சூழலிலேயே ஒரு குழந்தை வளர்க்கப்படுகிறது.

தேர்வு விடுமுடையில், பல ஸ்பெஷல் கிளாஸ்கள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும், கராத்தே, நீச்சல், கணிப்பொறி என்று பல வகுப்புகள் குழந்தைகளுக்கு ஓய்வு கொடுக்காமல் பிழிய தயாராகி இருக்கும். நாமும், உறவுமுறைகளுக்கு (தத்தா, பாட்டி) கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, இத்தகைய வகுப்புகளுக்கு அனுப்பி விட்டு “My kids are going to 4 different summer classes” என்று பெருமை அடித்துகொள்வோம்.

குழந்தைகள் பலதரப்பட்ட திறமைகளை வளர்த்துகொள்வது நல்லதுதான், எல்லை மீராதவரையில். இப்படி குழந்தைகளை மார்க் வாங்கும் ஒரு இயந்திரமாக நினைக்கும் போக்கை மாற்றாவிட்டால், படிப்பில் தேர்ச்சி அடைந்து விடுவார்கள், ஆனால், வாழ்க்கையில்???

அதைவிட முக்கியம், அவர்களுக்கு உறவுகளின் அருமை பெருமைகளை கற்றுக்கொடுப்பது.

இன்று எத்தனையோ மாணவ மாணவிகள் வளர்ந்துகூட தற்கொலை முடிவு எடுக்க காரணம், வாழ்க்கையில் தோற்றுவிடுவோமோ என்ற பயம்தான். அவர்களுக்கு கற்று கொடுக்கப்பட்டது, நீ ஒரு பந்தயக்குதிரை. ஜெயித்தே ஆகவேண்டும் என்ற பாடம் தான்.

அவர்கள் எல்லாம் தெரிந்த இயந்திரமாக வாழ்வதைவிட, உறவுகளின் அருமை தெரிந்த மனிதனாக, மனிதாபிமானத்துடன் வாழ்வது சிறந்தது என்பது என் கருத்து.

டிஸ்கி: இந்த விசயத்தில், வெளி நாடுகளில் வசிப்பவர்களின் நிலை கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம், அங்கே டியூஷன் போன்ற சமாச்சாரங்கள் இல்லை. குழந்தைகள் விளையாடுவதற்கு பல பூங்காக்கள் அமைக்கப்பட்டு இருக்கும். வார இறுதியில், ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சேர்ந்து வீட்டிலோ அல்லது வெளியிலோ சந்திப்பார்கள். குழந்தைகளுக்கு ஓடி ஆடி விளையாட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையோ ஊருக்கு வந்தாலும் கூட, தாத்தா, பாட்டி மற்று அனைத்து உறவினர்களையும் ஒரு முறை சந்திப்பார்கள்.
தொடர்புடைய பதிவுகள் :


4 comments:

  1. சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனபாலன் சார். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. Replies
    1. வணக்கம் கிருஷ். வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete