Tuesday, August 7, 2012

ஒரே வருடத்தில் 1.5 லட்சம் முதலீட்டில், 5 லட்சம் சம்பாதிக்க ஆசையா?

அனைவரும் ஆவலுடன் எதிபார்த்து கொண்டிருந்த அந்த நாள் வந்துவிட்டது.

இதை நான் பூரிப்புடன் சொல்லவில்லை. கேட்பதற்கே மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஈமு, இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று ஆசை காட்டி தொடங்கிய திட்டம் இது. செய்தி இதுதான்:

ஈரோட்டில் உள்ள சுசி  ஈமு கோழிப் பண்ணை மீது 250 கோடி ரூபாய் மோசடி  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் உள்ள 'சுசி ஈமு பார்ம்என்ற ஈமு கோழிப் பண்ணையில் ஏராளமானோர்  முதலீடு செய்திருந்தனர். இந்நிறுவனம் மீது  சமீபகாலமாகவே புகார்கள் கூறப்பட்டு வந்த  நிலையில்,'சுசி ஈமு பார்ம்ரூ.250 கோடி வரை முதலீடுகளைப் பெற்று மோசடி  செய்துவிட்டதாக அதன் நிர்வாக இயக்குனர் மீது 200 க்கும் மேற்பட்டோர் கடந்த இரு  நாட்களாக காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில்,இன்றும் 200  க்கும் அதிகமானோர் கூடி அதன் நிர்வாக இயக்குநர் பேரில் புகார் அளித்து, தங்கள்  முதலீடுகள் குறித்து கேட்டனர். இதனையடுத்து இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை  மற்றும் வருவாய் அதிகாரி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு, முதலீட்டாளர்கள்  சமாதானப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.


இது நேற்று விகடன் செய்தி

http://news.vikatan.com/index.php?nid=9763#cmt241

எத்தனையோ பித்தலாட்டம் மற்றும் ஏமாற்று வேலைகள் தினம் தினம் நடந்து மக்களை படுகுழியில் தள்ளிக்கொண்டு இருக்கும் நம் பாரத தேசத்தில், இந்த புது வகை ஈமு பித்தலாட்டம் ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிறது. மல்டி லெவல் மார்க்கெட்டிங் அடிப்படையிலே, ஒருவரிடம் பணம் வாங்கி, அதன் அடுத்தவருக்கு (பொருளாக) கொடுத்து பெருக்கிகொண்டிருந்த இந்த திட்டம் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று எத்தனையோ நல்லுள்ளங்கள் எச்சரித்தும், சீக்கிரம் லட்சாதிபதி, கோடீஸ்வரன் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையினால், பல விவசாயிகள் கூடிய விரைவில் அதல பாதாளத்தில் விழப்போகிறார்கள். அதற்கு ஒரு சிறிய ஆரம்பம் தான் மேலே உள்ள செய்தி.

கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் அளவில் இதிலே முதலீடு செய்யப்பட்டு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு வருடம் முன்பு, ஈமுவில் முதலீடு செய்திருந்த ஒருவரிடம் கேட்டேன், ஒருவேளை கம்பெனி உங்களுக்கு காசு கொடுக்கவில்லை என்றால், என்ன செய்வீர்கள்? அதற்க்கு அவர் சொன்ன பதில், அதுதான் ஈமு கோழி இருக்கிறதே, ஒரு கோழி 30,000 ரூபாய்க்கு போகும். அதை விற்று போட்ட பணத்தை எடுத்துவிடுவேன்.

ஈமுவில் முதலீடு செய்த அனைவரும் இப்படி நம்பி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது, இந்த ஈமுவை 30,000 அல்ல, ஒரு 300 கொடுத்து கூட வாங்க ஆள் இருக்காது.

எது எப்படியோ... இது ஒரு மோசடி என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இப்போது, அதிபுத்திசாலிகள் பலர், ஒப்பந்த முறை நாட்டுகோழி பண்ணை என்று கிளம்பி இருக்கிறார்கள். அதுவும், விரைவில் மோசடி என்று செய்திகள் வரும்.

குறுகிய காலத்தில் பணம் சம்பாரிக்க ஆசைபடுபவர்கள் இருக்கும் வரை, இந்த ஏமாற்று வேலை தொடரத்தான் செய்யும். மக்கள் ஏமாற்றுக்காரர்கள் விரித்த வலையில் விழுந்துகொண்டுதான் இருப்பார்கள்.

ஆனால், நமது அரசாங்கம், எல்லாம் தெரிந்தும் கூட வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கும்.
தொடர்புடைய பதிவுகள் :


10 comments:

 1. நல்லாச் சொல்லியிருக்கீங்க, விருச்சிகன். ஆனா பாருங்க, நம்மாளுகளுக்கு தலையிலதான் களிமண்ணா இருக்குதே? எதையும் யோசிக்க முடியாதே?

  ReplyDelete
 2. வருகை மற்றும் கருத்துக்கு நன்றி ஐயா. "களிமண்ணு" கூட மத்தவங்க சொல்லறத கேட்கும் ஐயா. அதாவது, அத வச்சு பானை பண்டம் செய்யலாம். நம்ம ஆளுங்களுக்கு சொந்த புத்தியும் கிடையாது, சொல் புத்தியும் கிடையாது. ஒண்ணுக்கும் உதவாத பார்த்தீனியம் செடி மாதிரி.

  ReplyDelete
 3. //ஒரு வருடம் முன்பு, ஈமுவில் முதலீடு செய்திருந்த ஒருவரிடம் கேட்டேன், ஒருவேளை கம்பெனி உங்களுக்கு காசு கொடுக்கவில்லை என்றால், என்ன செய்வீர்கள்? அதற்க்கு அவர் சொன்ன பதில், அதுதான் ஈமு கோழி இருக்கிறதே, ஒரு கோழி 30,000 ரூபாய்க்கு போகும். அதை விற்று போட்ட பணத்தை எடுத்துவிடுவேன்.

  ஈமுவில் முதலீடு செய்த அனைவரும் இப்படி நம்பி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது, இந்த ஈமுவை 30,000 அல்ல, ஒரு 300 கொடுத்து கூட வாங்க ஆள் இருக்காது. குறுக்கு வழியில் பணம் சம்பாரிக்க ஆசைபடுபவர்கள் இருக்கும் வரை, இந்த ஏமாற்று வேலை தொடரத்தான் செய்யும். மக்கள் ஏமாற்றுக்காரர்கள் விரித்த வலையில் விழுந்துகொண்டுதான் இருப்பார்கள்.//

  இது போன்ற வாதங்கள் ஏற்புடையது இல்லை, நம் அரசும் சமூக அமைப்புகளும் இழி நிலையில் மக்களை வைத்திருப்பதால், திருடுவது கொள்ளையடிப்பது தவிர்த்து வேறு வழிகளில் பணம் ஈட்ட முயற்சிப்பது தவறாக தெரியவில்லை, ஏமாற்றுபவர்களை அரசு காப்பாற்றுகிறது, ஏமாறுகிறவர்கள் மீது நம்மைப் போல் நடுநிலையாளர்கள் எள்ளி நகையாடுகிறார்கள், ஏற்கனவே மூடப்பட்ட எத்தனை நிதிநிறுவன அதிபர்கள் தற்பொழுது சிறையில் இருக்கிறார்கள் ? அவர்களுக்கு கிடைக்கும் அரசு ஆதரவு, பொதுமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஏன் கிடைக்கவில்லை .

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி கோவி. உங்கள் கருத்து ஞாயம்தான். எமாற்றுவர்களை அரசாங்கம் காப்பாற்றுகிறது. காரணம், நம் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளும், பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்பும் எமாற்றுகாரர்களும், பணம் கொடுத்தால் எஹையும் செய்ய தயாராக இருக்கும் அரசு அதிகாரிகளும்தான். என்னுடைய கடந்த சில பதிவுகளில் (நான் எழுதியதே சிலதான்), இதை சொல்லி இருந்தேன்.

   இந்த பதிவிலும் கூட, கடைசி வரியில் சொல்லி இருக்கிறேன் \\ஆனால், நமது அரசாங்கம், எல்லாம் தெரிந்தும் கூட வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கும்\\

   சிங்கப்பூர் போல ஒரு கடுமையான சட்டம் இருக்கட்டும் நம் நாட்டில். எவனாவது இந்த மாதிரி ஏமாற்று கம்பெனி ஆரம்பித்துவிட்டு மக்கள் பணத்தை கொள்ளை அடித்து விட்டு, பகட்டு வாழ்க்கை வாழ முடியுமா?

   அப்படி சட்டம் கொண்டு வருவதற்கு, நம் நாட்டில் நல்ல அரசியல்வாதிகளும் தேவை. அதற்குத்தான் பெரிய பஞ்சம் நிலவி அல்லவா வருகிறது?

   ஆனாலும் கூட, இதில் முதலீடு செய்த அனைவருமே... ஒரு 2 வருஷம் ஒட்டிட்டா, போட்ட முதலீடு கைக்கு வந்து விடும் என்ற ஒரு எண்ணத்தில் தான் முதலீடு செய்து இருக்கிறார்கள். 90% மக்களுக்கு தெரியும், இது ஒரு ஏமாற்று வேலை என்று... இருந்தாலும், குறுகிய காலத்தில் நிறைய பணம் என்ற மாயையில் சிக்கி சீரழிகிறார்கள்.

   நான், அவர்களை எள்ளி நகையாடவில்லை. அவர்கள் தெரிந்தே பள்ளத்தில் விழுந்ததைதான் சொல்லி இருக்கிறேன். இதில், எனது நெருங்கிய சொந்தகாரர்கள் பலரும் அடக்கம்.

   Delete
 4. சற்று முன் தான் பழனி.கந்தசாமி ஐயா தளத்திற்கு சென்று கருத்திட்டு வந்தேன்...

  ...ம்... நெருங்கிய உறவினரை மனம் நினைத்தால் தான் கஷ்டமாக உள்ளது...

  மக்களின் அறியாமை எப்போது மாறப் போகிறதோ...?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தனபாலன் சார். நெருங்கிய உறவினர்களில், ஒருவர் இப்போது ஒப்பந்த முறை நாட்டுகோழி பண்ணையிலும் முதலீடு செய்துள்ளார். இன்னொருவர், நான் சுசி-யில் முதலீடு செய்யவில்லை, வேறு ஒரு கம்பனில் தான் முதலீடு செய்துள்ளேன். அவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்கிறார். என்ன சொல்வது!!!

   Delete
 5. நீங்கள் "குறுக்கு வழியில் பணம் சம்பாரிக்க ஆசைபடுபவர்கள் இருக்கும்" என்று எழுதியதால் தான் நான் அவ்வாறு பின்னூட்டம் அளித்திருந்தேன் சட்டத்தையோ, அரசையோ ஏமாற்றாத வகையில், யாருக்கும் கெடுதல் செய்யாத வகையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்யலாம் என்று நினைப்பது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசை இல்லை. அவர்களை ஆராய்ந்து முதலீடு செய்யத் தெரியாத முட்டாள்கள் என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம், பேராசைக்காரர்கள் என்கிற தொனியில் எழுதி இருப்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  குறுக்குவழியில் சம்பாதிப்பதற்கு ஆயிரம் வழிகள் இருப்பது முதலீட்டாளர்களுக்கு தெரியாதா என்ன ?

  ReplyDelete
  Replies
  1. சுட்டிகாட்டியதற்கு நன்றி கோவி சார். "குறுக்கு வழியில்" என்பதை "குறுகிய காலத்தில்" என்று மாற்றிவிட்டேன். நான் எழுத நினைத்ததும் குறுகிய காலத்தில் என்று தான். தப்பு திருத்தப்பட்டுவிட்டது.

   ஆனால், இப்படி குறுகிய காலத்தில் சம்பாரிக்க பல "ஏமாறும்" வழிகளை தேர்ந்தெடுப்பவர்களை, நிச்சயம் பேராசைக்காரர்கள் என்றுதானே சொல்ல முடியும்? அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.

   Delete
 6. மிக தெளிவா, இன்னும் பல விஷயங்களோட, Tamil.oneindia.in கட்டுரை போட்டிருக்காங்க. லிங்க் கீழே.

  http://tamil.oneindia.in/news/2012/08/08/tamilnadu-investment-scam-cases-circular-trading-of-aussie-bird-159231.html

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கொடுத்த லிங்கை பார்த்தேன், விவரமாக உள்ளது நன்றி.

   Delete