Thursday, August 30, 2012

தமிழக போலீசாரின் பலம் அவ்வளவுதானா?

ஒரு காலத்தில் (இரண்டாம் உலகப்போர் சமயத்தில்), மெட்ராஸ் ரெஜிமென்ட் என்றால் துப்பறிவதில் உலகத்திலே இரண்டாவது மிக சிறந்த காவல்துறை (முதலாவது, ஸ்காட்லான்ட் யார்ட்) என்று பெயர் பெற்ற, நமது தமிழக காவல் துறை இப்போது, முதலிடத்தில் இருக்கிறது. ஆம், தொப்பை வளர்ப்பதிலும், மாமூல் வாங்குவதிலும், குற்றவாளிகளை தப்பிக்க விடுவதிலும். சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது இது மறுபடியும் நிரூபிக்கபட்டிருக்கிறது.


பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடுகள். இது வெளிச்சத்துக்கு வந்து கிட்டத்தட்ட 30 நாட்கள் முடிந்துவிட்டன. இந்த முறைகேட்டுக்கு காரணமான குவாரி அதிபர்கள் 15 பேரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

இதேபோல, சுசி ஈமு கோழி நிறுவனத்தின் குரு வின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுவிட்டது. விரைவில் கைது செய்வோம் என்று வாய்சவடால் விட்டுகொண்டுள்ளனர். ஆனால், அவரோ வக்கீல் மூலமாக பல முறை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துகொண்டுள்ளார். இந்நேரம், ஆஸ்திரேலியாவிலோ, அமெரிக்காவிலோ, சுதந்திரமாக டான்ஸ் ஷோ பார்த்துகொண்டு இருக்க கூடும்.

உண்மையிலேயே நமது காவல்துறை இத்தகைய குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லையா? அல்லது, பிடிக்க முடியாதது போல ஒரு மாயை உருவாக்கபட்டுள்ளதா?

கடந்த பல வருட அரசியலை உற்றுப்பார்த்தால் தெரிய வருவது, ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நடைபெறும் சில முக்கிய வேளைகளில் ஒன்று, உயர் காவல் அதிகாரிகளின் மாற்றம். ஆளும்கட்சிக்கு விசுவாசமான அதிகாரிகள் முக்கிய பதவியில் அமர்த்தபடுவது. அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களை தூக்கிவிட்டு, புதிய ஆளும்கட்சியின் விசுவாசிகளை முக்கிய பொறுப்புகளில் நியமிப்பது.

ஆக, எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் காவல் துறையில் மூன்று பிரிவுகள் இருக்கும். ஆளும் கட்சி விசுவாசி கூட்டம், எதிர்க்கட்சி விசுவாசி கூட்டம் மற்றும் தாங்கள் போட்டுக்கொண்டுள்ள காக்கி சட்டைக்கு விசுவாசியான கூட்டம். இதில் மூன்றாவது பிரிவினரை இப்போது பார்ப்பது மிகவும் அரிது.

கிரானைட், ஈமு கோழி போன்ற மோசடி பேர்வழிகளுக்கு, காவல் துறையின் ரகசிய நடவடிக்கைகள் அவர்களது விசுவாசிகள் மூலமாக தெரிந்து கொண்டு, திறமையாக தப்பிக்க முடிகிறது என்றுதான் நினைக்கிறேன்.

யாருக்கு தெரியும், இந்த குற்றவாளிகள் அவர்களுடைய முகநூலில், மணிக்கொரு முறை தங்களது இருப்பிட நிலவரத்தை புதுப்பித்துக்கொண்டு இருப்பார்களோ என்னவோ?

Thursday, August 16, 2012

விஸ்வரூபம் நாயகி பூஜா குமார், ரஜினிக்கு மாமியாராக நடிக்கிறாரா?

கொஞ்சம் அதிர்ச்சியான செய்திதான். உலகநாயகன் கமலஹாசனுடன் விஸ்வரூபம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வருபவர் பூஜா குமார். இவர் ஒரு பஞ்சாபி. தற்போது, அமெரிக்காவில் வசித்து வருகிறார்.


இவர் அடுத்த படத்தில், ரஜினிக்கு மாமியார் என்ற செய்திக்கு போகும் முன்பு, இதற்கு முன்னால் கமலுடன் நடித்த நடிகைகளின் நிலைமையை கொஞ்சம் பார்ப்போம்.

உலகநாயகன் கமலஹாசனுடன் கடந்த 10 திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நாயகிகள் மற்றும் விவரங்கள்:

·         பம்மல் கே. சம்பந்தம் (2002) – சிம்ரன். இதற்கு பிறகு அவர் நடித்து வெற்றி அடைந்த திரைப்படங்கள் என்றால், நியூ(2004), வாரணம் ஆயிரம்(2008), போன்ற படங்கள் வணிகரீதியாக வெற்றிப்படங்கள் ஆகும். திருமணம், குழந்தை அதற்க்கு பிறகு வாரணம் ஆயிரத்தில் சூர்யாவிற்கு அம்மா. தற்போது ஜெயா தொலைகாட்சியின் ஜாக்பாட் நிகழ்ச்சி

·         பஞ்சதந்திரம் (2002) – சிம்ரன் மற்றும் ரம்யா கிருஷ்ணன். சிம்ரன் பற்றி சொல்லியாகிவிட்டது. ரம்யா கிருஷ்ணன் இந்த திரைப்படத்திற்கு பிறகு கிருஷ்ணா வம்சை என்கின்ற தெலுங்கு இயக்குனரை 2003 இல் திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது ஒரு சில குத்து பாட்டுகளுக்கு நடனமும், தொலைகாட்சியில் நடன நிகழ்சிகளுக்கு நடுவராகவும் தொண்டு செய்து வருகிறார்

·         அன்பே சிவம் (2003) – கிரண். இதற்குபிறகும், அதிர்ஷ்ட வசமாக, ஒன்றிரண்டு திரைப்படங்களில் திறமை காட்டும் வாய்ப்பு. வெற்றிப்படங்கள் வின்னர் மற்றும் வில்லன். தற்போது இருக்கும் தெரியவில்லை

·         விருமாண்டி (2004) – அபிராமி. இதுதான் இவருக்கு கடைசி திரைப்படம் என்று நினைக்கிறேன்

·         வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004) – சினேகா. இந்த பட்டியலில் தப்பி பிழைத்த ஒரே நடிகை என்று சொல்லலாம். வசூல் ராஜாவிற்கு பிறகும், பல படங்களில் நடித்து வெற்றி நடிகையாக தொடர்ந்தார்

·         மும்பை எக்ஸ்பிரஸ் (2005) - மனிஷா கொய்ராலா. சூப்பர் ஸ்டாரின் மருமகனுக்கு மாமியாராக (மாப்பிள்ளை படத்தில்) நடித்து சாதனை புரிந்தது

·         வேட்டையாடு விளையாடு (2006) – ஜோதிகா மற்றும் கமலினி முகர்ஜி. ஜோதிகாவுக்கு மொழி தவிர எதுவும் சொல்லிக்கற மாதிரி இல்லை. கமலினியின் நிலைமையோ, அப்படி ஒருத்தர் இருந்தாரா என்று கேட்குமளவுக்கு ஆகிவிட்டது

·         தசாவதாரம் (2008) – அசின். காவலன் படம் ஒண்ணுதான். பாலிவூட் என்று சொல்லும் ஹிந்தி திரைப்பட உலகத்தில் நுழைந்து ஏதோ ஓரளவிற்கு தாக்கு பிடித்துகொண்டிருக்கிறார். தமிழில் அக்கா வேடத்தில் நடிக்க கூப்பிடகூட ஆள் இல்லை

·         உன்னைப்போல் ஒருவன் (2009) -  நல்லவேளை, ஜோடின்னு யாரும் இல்லை. ஒரு நடிகை தப்பிச்சாச்சுப்பா

·         மன்மதன் அம்பு (2010) – த்ரிஷா. ஒன்னே ஒன்னு.... மங்காத்தா. அதிலும் ஒரு 15 நிமிடமே தலை காட்டும் வாய்ப்பு

இப்போ சொல்லுங்க. பூஜா குமார் இதுக்கு அப்புறம் ஒரு படம் நடிச்சா, ரஜினிக்கு மாமியாரா நடிக்காம, தனுஷுக்கு ஜோடியாவா நடிக்க முடியும்?

விஸ்வரூபம் நாயகி பூஜா குமார் பற்றிய இன்னொரு செய்தி: இவர்  சில ஆங்கில படங்களிலும் தலை காட்டி இருப்பதாக செய்தி. பல வருடங்களுக்கு முன்பு, கேயார் இயக்கிய காதல் ரோஜாவில் இவர் நடித்துள்ளாராம்.

கடசியா.. கமல் ரசிகர்களே.. மன்னிச்சுகோங்க... நான் இதெல்லாம் வேணும்னே பண்ணல பாஸ். நம்புங்க.

Tuesday, August 14, 2012

வல்லரசுனா என்ன? நாம எப்போ வல்லரசு ஆவோம்?

இன்னிக்கு சாயந்திரமா, அப்படியே காத்தாட வாய்க்கா வரப்புல நடந்து போயிட்டிருந்தேன். அப்போ, நம்ம ராமசாமி அண்ணன் ஆடு, மாடு ஓட்டிட்டு வந்துட்டு இருந்தாரு. என்ன தம்பி, காத்தாட வந்துட்டு இருக்கே... அப்படின்னார்.

அது ஒன்னும் இல்லன்னே.. நாளைக்கு நம்ம நாட்டோட 65வது சுதந்திர தின நாள். நாளைக்கு லீவு, அதனால அப்படியே ஊர் பக்கம் வந்தேன் அப்படின்னேன்.

சரி... ஒரு விஷயம், ரொம்ப நாளா யாரையாவது கேக்கனும்னுட்டு இருந்தேன்... நீ வந்துட்டே... ரொம்ப நல்லதாப்போச்சு. உன்கிட்டயே கேட்டுரவேண்டியதுதான்-னார்

கேளுங்கண்ணே. எனக்கு தெரிஞ்சத சொல்லறேன்னேன்.

எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் அப்புறம் இந்த விஞ்ஞானிங்க எல்லாம்  சொல்லறது, நம்ம நாடு கூடிய சீக்கிரம் வல்லரசு ஆயிடும்னு. வல்லரசுனா என்ன தம்பி? நாம எப்போ வல்லரசு ஆவோம்?

நல்ல கேள்வி. சொல்றேன் கேட்டுக்கோங்க.

வல்லரசு ஆறது அவ்வளவு ஈசி இல்லண்ணே.  அதுக்கு, நம்ம நாடு நெறைய விஷயத்துல முன்னேறனும். முக்கியமா, நிலையான அரசியல் அமைப்பு, வலுவான இராணுவம், ஆரோக்கியமான பொருளாதாரம், சிறந்த உள்நாட்டு பாதுகாப்பு, மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் எல்லாம் இருந்தாதான் ஒரு நாடு வல்லரசு ஆகமுடியும்.

இப்போ, இதுபத்தி ஒவ்வொன்ன பாக்கலாம்:

நிலையான அரசியல் அமைப்பு: ஒரு நாட்டுல இருக்கற அரசாங்கம், ஆட்சிக்கு வந்த உடனே, எப்போ கவிழுமோ அப்படடின்னு இருக்ககூடாது. 5 வருஷ ஆட்சின்னா, அந்த அஞ்சு வருஷமும் எந்த பிரச்சனையும் இல்லாம நிலையான ஆட்சிய குடுக்கணும்.

வலுவான இராணுவம்: பக்கத்து நாட்டுக்காரன் யாரும், நம்மகிட்ட சண்டைக்கு வர பயப்படனும். அப்படியே நம்ம கூட சண்டைக்கு வந்தா, அவன எதிர்த்து போறாரடி ஜெயிக்கற அளவுக்கு நம்ம கிட்ட ராணுவ பலம் வேணும். சிறந்த விமான படை, கப்பல் படை, பீரங்கி எல்லாம் வச்சிருக்கணும். இங்கே இருந்து அமெரிக்கா வரைக்கும் போயி குண்டு போடற மாதிரு ஏவுகணை எல்லாம் இருக்கணும்.

ஆரோக்கியமான பொருளாதாரம்: இந்த பொருளாதாரத்துக்கு அடிப்படைய இருக்கறது, Gross Domestic Product (GDP) என்று சொல்லக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தி. ஒரு நாட்டோட பொருளாதாரத்தின் வலிமையை அளவிடரதுக்கு பயன்படுத்தற ஒரு அளவுகோல்தான் இந்த GDP.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்ள, ஒரு நாட்டுல உற்பத்தி செய்யபடற மொத்தப் பொருட்கள் மற்றும் சேவைகளோட சந்தைப் பெறுமதியே மொத்த உள்நாட்டு உற்பத்தி அப்படின்னு சொல்லப்படுது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளப்பதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் பொதுவாகப் பயன்படுவது செலவின முறையாகும் (expenditure method).

சுருக்கமா சொன்னா, மொத்த உள்நாட்டு உற்பத்தி = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி)
சிறந்த உள்நாட்டு பாதுகாப்பு: இதுக்கு பெருசா விளக்கம் உண்ணும் தேவை இல்லை. நம்ம நாட்டுல குற்றம் எதுவும் பெருசா நடக்காம பாத்துக்கணும். அப்புறம், மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கணும். முக்கியமா பக்கத்து நாட்டுக்காரன் நம்ம ஊருக்கு டூர் வர்ற மாதிரி வந்து, ரயில்வே ஸ்டேஷன்லையும், ஹோட்டல்லயும் போயி கண்ணுல படரவங்கலேல்லாம் சுடக்கூடாது.

மேம்பட்ட தொழில்நுட்பம்: எல்லா துறையிலயும், லேட்டஸ்ட் தொழில்நுட்பத்த உபயோகபடுத்தி மக்களுக்கு பயன் படுறமாதிரி கருவிகள் தயாரிக்கணும். விவசாயத்துல இருந்து, ராக்கெட் வரைக்கும் எல்லாவிதமான லேட்டஸ்ட் தொழில்நுட்பமும் இருக்கணும்.

மேலே சொன்ன எல்லா விஷயத்திலையும் நாம முன்னேற்றம் அடஞ்சாத்தான், வல்லரசு அப்படிங்கற அந்தஸ்துக்கு உயரமுடியும். நான் சொன்னது முக்கியமான சில விஷயம்தான். இது மாதிரி இன்னும் நெறைய இருக்கு.


இப்போ, அமரிக்காவ பாருங்க. எந்த நாடு எங்கே என்ன சண்ட போட்டாலும், இவருதான் நாட்டமை பண்ணுவாரு. இவரு சொல்லறதுதான் தீர்ப்பு. எல்லா நாடும் இவரு பேச்சாத்தான் கேக்கனும்னு எழுதாத சட்டம் போட்டு வச்சிருக்காரு. என்ன காரணம்? மேலே சொன்னதுல முக்கவாசில அந்த நாடு முன்னேறி இருக்கு.

நல்லா புரிஞ்சிடுச்சு தம்பி. இத்தனை நாளா நம்ம அரசியல்வாதிங்க சொன்னத கேட்டு நானும், நம்ம நாடு சீக்கிரம் வல்லசரசு ஆயிடும்னு மனக்கோட்டை கட்டிட்டு இருந்தேன். நீ சொன்ன பல விஷயத்துல நாம இன்னும் அதல பாதாளத்துல இருக்கோம். ஒண்ணொண்ணா மேல ஏறி வர்றதுக்குள்ள, சுத்தி இருக்கற மத்த எல்லா நாடுகளும் வல்லரசாயிடும்னு நினைக்கறேன்.

நீங்க சொல்லரதுலயிம் உண்மை இருக்கத்தான் செய்யுது அண்ணே. நம்ம நாட்டுல இருக்கற இயற்கை வளங்களுக்கும் மக்களோட அறிவுக்கும், நல்ல தலைவர்களும் ஊழல் இல்லாத ஆட்சியையும் கடமை தவறாத அதிகாரிங்களும் இருந்திருந்தா, நாம இந்நேரம் வல்லரசு ஆயிருப்போம்.

300 வருஷமா ஆங்கிலேயன் கொடுங்கோல் ஆட்சி பண்ணி நம்மிடம் இருந்து சுரண்டியதை, இப்போ ஜனநாயக ஆட்சின்னு சொல்லிட்டு இந்த 65 வருஷம்மா சுரண்டிட்டு இருக்காங்க.

இருக்கற நல்ல அறிவாளிங்க எல்லாம் வெளிநாடு போயி அவங்களுக்கு வேலை பாக்கறாங்க. நம்ம நாட்டுல நல்ல வேலை வாய்ப்பு இருந்து, ஊழல், லஞ்ச லாவண்யம் எல்லாம் இல்லாம, நல்ல தரமான வாழ்க்கை முறை இருந்தா, அவங்க ஏன் வெளிநாடு போகணும்?


ஆனா, இங்கே என்ன நடக்குது? சட்டசபை, பார்லிமெண்டுல போயி உக்காந்து பலான படம் பாக்கறாங்க இல்லன்னா, கொறட்ட போட்டு தூங்கறாங்க. அப்படியும் இல்லையா, கோஷம் போட்டுட்டு வெளியே வந்துடறாங்க. மொத்ததுல, நம்ம வரிப்பணம் கோடி கோடியா வீணாயிட்டு இருக்கு.

நாட்டுல கடுமையான சட்டம் கொண்டு வரணும். அரசாங்க அதிகாரிங்க, அப்புறம் இந்த அரசியல்வாதிங்க எல்லாம் தப்பு பண்ணினா உடனே விசாரிச்சு தண்டனை குடுத்தாத்தான், நாடு முன்னேறும். நம்ம பேரன் பேத்தி காலத்துலயாவது நாடு முன்னேறி வல்லரசாகனும்னு சொல்லிட்டு, ராமசாமி அண்ணன் ஆடு, மாட்ட ஓட்டிட்டு போயிட்டாரு. அவரு சொல்லறதும் சரிதானே!

Monday, August 13, 2012

ஊரை ஏமாற்றும் சாமியார்கள் உருவாவது எப்படி?

பிரேமானந்தா, நித்யானந்தா, கல்கி சாமியார், இது மட்டுமல்லாமல் பீடி சாமியார், குட்டி சாமியார், அரிவாள் சாமியார், சாராய சாமியார் இன்னும்  இப்படி எத்தனையோ சாமியார்கள் இந்தியா/தமிழகம் முழுவதும் தங்களது ஆசிரமங்களை அவர்களது வசதிக்கு தகுந்தார்ப்போல் அமைத்து, மக்களுக்கு ஆசி (???) வழங்கிகொண்டு இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள்.அப்பா, அம்மா,  சகோதரன், சகோதரி, மனைவி, மக்கள் என மொத்த குடும்பமே இருந்தும், இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் சாமியாரை தேடி போக என்ன காரணம் என்று யோசித்து பார்த்தன் விளைவுதான் இந்த இடுகை.

சாமியார்கள் என்பவர்கள், கடந்த பல ஆயிரகணக்கான வருடங்களாகவே இந்திய/தமிழக வரலாற்றில் இருந்துள்ளனர். ராமாயணம், மகாபாரதம் என்று எல்லா இதிகாசங்களிலும் எத்தனையோ முனிவர்கள் இதிகாச நாயகர்களுக்கு குருகுல பயிற்சி முதல் பல கலைகளும் கற்று கொடுத்தது நாம் அறிந்ததே.

புராண காலத்தில் சாமியார்கள் (முனிவர்கள்) என்பவர்கள் அரச குலகுருவாகவும், பல வித்தைகளை கற்றுக்கொடுப்பவர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால், இன்றைய சாமியார்கள் என்பவர்கள், ஒன்று சித்து வேலைகள் தெரிந்த மந்திரவாதிகளாகவோ அல்லது மக்களை மயக்கும் அளவு பிரசங்கம் செய்பவர்களாகவோ இருக்கிறார்கள்.

இவர்களை நோக்கி புற்றீசல்கள் போல மக்கள் படையெடுக்க காரணம் என்ன?

இன்றைய குடும்ப சூழலில், சொந்த பந்தங்கள் எவ்வளவோ இருந்தாலும், மனிதனுக்கு பிரச்சனைகள் அதைவிட அதிகமாக இருக்கின்றன. மனைவியுடன் பிரச்சனை, அப்பா அம்மாவுடன் சண்டை, சகோதரர்களுடன் சச்சரவு, வியாபாரத்தில் நஷ்டம் இப்படி காலை முதல் இரவு வரை பல வகையான பிரச்சனைகள். சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சனை. சிலருக்கு பிள்ளை இல்லையே என்ற பிரச்சனை. சரி, கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றாலும், பலருக்கு தூக்கமே ஒரு பிரச்சனைதான். இப்படி பிரச்னையை தன்னுடைய உடலின் ஒரு அங்கமாகவே சுமந்துகொண்டிருக்கும் பலர், சாமியார்களை தேடி ஓடுவது, நமக்குள்ள பல பிரச்சனைகளையும் கடவுள் உருவில் இருக்கும் சாமியார் என்ற தீர்கதரிசி தீர்த்துவைப்பார் என்ற நம்பிக்கையில்.

திருநீறு கொடுக்கும் கூட்டம், குறி சொல்லும் கூட்டம் என்று இருந்த சாமியார்கள், கடந்த சில வருடங்களாக இளைஞர்களை குறிவைத்து பிரசங்கம், முன்னணி பத்திரிகைகளில் கட்டுரை மற்றும் தியானம் என்று தேர்ந்த ஒரு வியாபாரி போல தங்கள் ஆசிரமங்களை அமைத்து மக்களை அடிமைபடுத்த ஆரம்பித்தனர்.

இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது?

இந்தியர்கள் மட்டுமல்ல, பல வெளிநாட்டு ஏமாளிகளும் இவர்கள் விரித்த வலையில் விழுந்து பணத்தை அள்ளி வீசுகிறார்கள். இவர்கள் செய்வது எல்லாம், தங்களது ஆசிரமத்தை அமெரிக்கா, ஐரோப்பா என்று எல்லா நாடுகளிலும் பரவச்செய்வது. மாதமாதம் பல வெளிநாடுகளுக்கும் சென்று தங்கள் வித்தைகளை பறைசாற்றி பல லட்சங்களை சுருட்டுவது.

நித்யானந்தா சாமியாரின் லீலைகள் வெளிச்சத்திற்கு வந்தாலும்கூட, அவருக்கு இளைய ஆதீனம் பதவி கொடுத்து தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.சமீபத்தில், கல்கி சாமியார் ஆசிரமத்தில் போதைக்கு அடிமையாகி சீரழிந்து கொண்டிருக்கும் செய்தி பல மாதங்களுக்கு முன்னால் தொலைக்காட்சியிலும் ஒரு நிகழ்ச்சி வாயிலாக அனைவருக்கும் தெரியவந்தது. இங்கே இருப்பவர்கள் அனைவருமே, அரை பாட்டில் சரக்கு அடித்தமாதிரியே உலவிக்கொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள் youtube தளத்திற்கு சென்று, Abnormal activities in Kalki Bhagwan ashram என்று டைப் செய்யுங்கள்.

அல்லது, கீழே உள்ள சுட்டியில் பார்க்கலாம்.


பல பகுதிகளாக காணொளி கிடைக்கும். இதுவரை பார்க்காதவர்கள், அதைப்பார்த்து அதிர்ச்சி அடையலாம்.

இது தெளிவாக ஏமாற்றுவேலை என்று தெரிந்தாலும் கூட, இப்போது அவர் இன்னும் அதே ஆசிரமத்தில் தான் ஏமாற்றி கொண்டு இருக்கிறாரா இல்லை காவல்துறை ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என்று தெரியவில்லை.

புதிதாக ஒரு சாமியாரைபற்றி இப்போது ஒரு செய்தி. கஞ்சா வித்தவர், மனைவியை கொன்றவர் என்று. இப்படி வாரா வாரம் ஒரு சாமியாரின் லீலைகள் அம்பலமாகி வருகிறது.

இப்படி மக்களை ஏமாற்றும் இந்த குள்ளநரி கூட்டத்தை இன்னும் எத்தனை நாளுக்குத்தான் நாமும் பார்த்து ஏமாந்துகொண்டே இருக்கப்போகிரோமோ?