Monday, August 6, 2012

உடனடித் தேவை - இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கும் ஓட்டை உடைசல்களை அடைப்பது

"ஒரு நாயை தூக்கில் போடுவதானாலும், விசாரித்து தூக்கில் போடு" - இது ஆங்கிலேயர் நமக்கு கொடுத்து சென்ற புத்திமதி. "நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை, ஒரு நிரபராதிக்கு தண்டனை கொடுத்திவிடக்கூடது" - இது நம் தேசத்தந்தை காந்தியின் கட்டளை.1947, ஆகஸ்ட் 29-ல் அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது. அதில் இடம்பெற்றவர்கள்:  பீ. இரா. அம்பேத்கர், கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ் மற்றும் டி. பி. கைதான். அவர்கள் உருவாக்கியதுதான் இன்றைய அரசியலமைப்பு சட்டம். ஆனால், இன்று அது ஓட்டை உடசல்களின் ஒட்டுமொத்த உருவம்.

தவறு எங்கே இருக்கிறது?

எல்லாம் சரி. 1947-ல் இந்தியாவிலே, மனிதன் மனிதனாக, மனிதாபிமானம் மிக்கவனாக இருந்தான். அப்போது இயற்றப்பட்ட சட்டங்கள், நம் மூதாதயார்களுக்கு போதுமானதாக இருந்தது. நமது தமிழ் நாட்டிலும், கர்ம வீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, ஐயா கக்கன் போன்ற எத்தனையோ சுயநலமில்லாத பெருமக்கள் தலைமையில் ஆட்சி நடந்தது. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். கொலை, கொள்ளை, ஊழல் மிக குறைவாக இருந்தது. அண்ணல் அம்பேத்கார் அவர்களின் சட்டமும் சரியாகவே இருந்தது.

இப்போது அப்படியா? கடந்த 20 முதல் 30 வருடங்களிலே,  மலை முழுங்கி மகாதேவன்கள் தலைமையில் அல்லவா ஆட்சி நடக்கிறது? ஊழல், தீவிரவாதம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று அடுக்கிகொண்டே போகும் அளவுக்கு, நம் நாடு முன்னேற்றபாதையில் சென்று விட்டது.

2008-ம் வருடம் டிசம்பர் மாத புள்ளி விவரத்தின்படி, 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருந்தனர். இன்றைய தேதியில், இது இன்னும் அதிகரித்திருக்குமே தவிர, குறைந்திருக்க வாய்ப்பே இல்லை.

ஒரு தீவிரவாத கூட்டம், மக்களை குருவி சுடுவதைப்போல சுட்டு கொன்றதை, ஆதாரத்துடன் படம் பிடித்து, அப்படி சுட்ட ஒரு நாயை, நாம் இன்னும் விசாரணை என்ற பெயரில் வைத்து விளையாட்டு காட்டிகொண்டுள்ளோம்.

நீ தீவிரவாதத்தை நிறுத்து. இல்லையேல் நாங்கள் கிரிக்கெட் விளையாட வரமாட்டோம் என்று பினாத்திகொண்டுள்ளோம். கேட்கவே வெட்கமாக இல்லை?

பள்ளி வாகனத்தில் ஓட்டை, சிறுமி கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி இறந்த பின்னாலும், சட்டத்தில் இருக்கும் பெரிய ஓட்டையில் தேடுகிறார்களாம், RTO - வை காப்பாற்றுவது எப்படி என்று? அதிலும், ஒரு ஓட்டை கண்டுபிடித்து விட்டார்களாம். வாகன தகுதி சான்றிதழ் வழங்கும்போது வாகனத்தின் தளமேடையை சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டத்திலே ஒரு ஓட்டை இருக்கிறதாம். கூடிய விரைவில், RTO வும் வெளியே வந்து விடுவார், பள்ளி தாளாளரும் இன்னும் பல ஓட்டை வண்டிகளை விட்டு பல பள்ளி சிறார்களுக்கு எமனாகவே இருப்பார்.

நாட்டில் கடுமையான தண்டனை கொடுக்கும்வரை, தவறான செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். ஊழல் பெருச்சாளிகளின் வயிறு வீங்கிகொண்டேதான் இருக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துகொண்டுதான் இருக்கும். பல தீவிரவாதிகள் வந்து காக்கை, குருவி சுடுவதைப்போல, மக்களை சுட்டுவிட்டு, பரோட்டா சாப்பிட்டுவிட்டு போய்க்கொண்டுதான் இருப்பார்கள்.

சட்டத்தை காக்கவேண்டிய காவல்துறை, அரசியல்வாதிகளின் ஏவல் துறையாக மாறி நிற்கிறது. கொடுமையிலும் கொடுமை, நீதிபதிகளே லஞ்ச லாவண்யதில் சிக்கி திளைப்பது

இந்தியா சகிப்புத்தன்மை உள்ள நாடுதான். இப்படியே சகித்து கொண்டே இருந்தால், நம் வாயில் மலத்தை திணித்துவிட்டு, சிறுநீரை ஊற்றிவிட்டு போய்கொண்டே இருப்பார்கள். உடனடி தேவை, ஓட்டை உடைசல்களை அடைத்து, கடுமையான தண்டனைகளை உடைய சட்டம். அதை நிறைவேற்ற ஒரு அரசாங்கம்.

நெஞ்சு பொறுக்குதிலையே... என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

பலவற்றை போல, இதுவும் ஒரு கனவாகவே போய்விடுமோ???
தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment